ராஜபக்ச ஆட்சியில் வலுவிழந்த வழக்குகளை தூசுதட்டும் அநுர அரசாங்கம்
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும், அதற்கு முன்னதான காலத்திலும் ராஜபக்சர்களின் ஆட்சியல் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான எதிர்வினைகள் இன்றுவரை பகிரங்கப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்படுகினறன.
2015 ஆம் ஆண்டு ராஜபக்சர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னரும், 2022 இல் அரகலயவினால் மீண்டும் அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னருமான காலப்பகுதியிலேயே இவ்வாறான குற்றச்செயல்களின் பின்னணி கருத்துக்கள் மேலோங்கியது.
ராஜபக்சர்களின் ஆட்சியல் மூடி மறைக்கப்பட்டதாக கருதப்படும் நிதி மோசடிகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் படுகொலைகள் போன்ற வழக்குகள் அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தினால் தற்போது தூசுதட்டப்பட்டுகின்றன.
அந்தவகையில் 2006 ஆம் ஆண்டு ராஜபக்சர்களின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மிக் 27 யுத்த விமான கொள்வனவு தொடர்பான ஊழல் மோசடி விசாரணை மறுபடியும் வெளிகொணரப்பட்டுள்ளது.
இதன்படி மிக் - விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பான மூல ஆவணங்கள் மாயமானமை தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த வழக்கை எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
16, மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மேலதிக அறிக்கையின்படி, பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
2006 ஆம் ஆண்டு மிக்- 27 ரக விமான கொள்வனவின்போது இடம்பெற்ற சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உதயங்க வீரதுங்க சந்தேக நபராக பெயரிடப்பட்டார்.
2016.10.20 ஆம் திகதி அப்போதைய கோட்டை நீதிவானாக இருந்த லங்கா ஜயரத்ன குற்றவியல் சட்டத்தின் 63 (1) அ பிரிவின் கீழ் இந்த பிடியாணையை பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கு அரசியல் பழி வாங்கல் நோக்கில் தொடுக்கப்பட்டது என உதயங்க வீரதுங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றுக்கு கூறியபோதுத் 2016.10.20 ஆம் திகதி அப்போதைய நீதிவான் லங்கா ஜயரத்ன பிடியாணை வழங்கும்போது இருந்த நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என சுட்டிக்காட்டிய கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க பிடியாணையை மீளப்பெற முடியாது என அறிவித்தார்.
2006 ஆம் ஆண்டு உக்ரேனிடமிருந்து இலங்கை மிக் 27 ரக போர் விமானங்கள் நான்கினை கொள்வனவு செய்திருந்தது
இந்நடவடிக்கையானது அப்போதைய ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டிருந்தது.
லசந்த விக்கிரமதுங்க
இது குறித்த ஒப்பந்தங்களும் விமானப்படையிடமிருந்து காணாமல் போயுள்ள நிலையில் இக்கொள்வனவு தொடர்பில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
முன்னாள் சிரேஸ்ட ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும் இந்த ஒப்பந்தம் தொடர்பிலான விசாரணைக்கும் தொடர்பு இருப்பதான செய்திகள் பலவும் வெளிவந்திருந்தன.
இலங்கையின் முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிசாந்த சில்வா சண்டே லீடர் செய்தித்தாளில் வெளியான மிக் உடன்படிக்கை தொடா்பான தகவல்களே, லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான காரணம் என சர்வதேச பத்திரிகை சுதந்திர அமைப்புகளின் கூட்டமைப்பிடம் தெரிவித்திருந்தார்.
மிக் உடன்படிக்கை தொடா்பான தகவல்களே, அவரது கொலைக்கான முக்கிய நோக்கத்தை உருவாக்கியிருக்கலாம் என்று தாம் நம்புவதாக, நிசாந்த சில்வா கூறியிருந்தார்.
மேலும் தனது தந்தையின் கொலைக்கு மிக் உடன்படிக்கை காரணம் எனவும், கோட்டாபய ராஜபக்சவால் தாம் கொல்லப்படுவேன என தனது தந்தை நம்பியதாக தெரிவித்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க, கல்கிசை நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக பகிரங்கப்படுத்தியிருந்தார்.
மேலும் நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மிக் விமான மோசடி, தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என 2022. 05.04 அன்று இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.
ஊழல் மோசடி
இலங்கை விமானப்படைக்கு, மிக்-27 போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில், சுமார் 3 வருட காலமாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிதி மோசடி விசாரணைப் பிரிவு, 2018 மார்ச் 19 அன்று சில தகவல்களை வெளிப்படுத்தியிருந்தது.
மிக்-27 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக, உக்ரைனில் உள்ள இராணுவப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்துக்கும் (உக்ரைன்மாஸ்) இலங்கை விமானப்படைத் தளபதிக்கும் இடையில், போலியான ஆவணங்களைக் கொண்டு உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உக்ரைன் நாட்டு அரச வழக்கறிஞர், மேற்படி போர் விமானக் கொள்வனவு செய்யும்போது ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில், நிதிமோசடி இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளாரென, நிதி மோசடி விசாரணைப் பிரிவு சுட்டிக்காட்டியது.
இலங்கை விமானப்படைக்கு, மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக, பெல்லிமிஸ்ஸா ஹோல்டிங்கஸ் லிமிடட் என்ற நிறுவனத்துக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், கொடுக்கப்பட்ட அந்தப் பணமானது, பிரிட்டிஸ் வெர்ஜின் தீவுகளில் இரகசியமாக இயங்கிவந்த வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டுள்ளமை அம்பலமாகியதாக கூறப்பட்டது.
இலங்கை விமானப் படைக்கு, கடந்த காலங்களில் போர் விமானங்களை வழங்கியிருந்த சிங்கப்பூரை மையமாகக்கொண்டு இயங்கும், டி.எஸ்.ஏலியனஸ் நிறுவனத்துடமிருந்தே, இலங்கைக்குப் போர் விமானங்களை வழங்குவதற்கு, உக்ரைன் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, டி.எஸ்.லீ என்பவரே இருந்துவந்துள்ளார். இவர், பெல்லிமிஸ்ஸா ஹோல்டிங்கஸ் லிமிடட் நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பு வகித்துள்ளமையும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
இந்நிலையில், மிக்-27 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும்போது, உக்ரைன் இராணுவப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் சார்பில் கையெழுத்திட்ட முக்கிய நபர் ஒருவர், உக்ரைன் நாட்டை விட்டுத் தப்பி ஓடியுள்ளதாகவும் பின்னர், உக்ரைன் அதிகாரிகள் அவரை, பாரிஸ் நகரில் வைத்துக் கைது செய்துள்ளதாகவும், நிதி மோசடி விசாரணை பிரிவு கூறியது.
மிக் 27 ரக விமானம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு செயலாளரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிடமும் விசாரணைகள் இடம்பெற்றிருந்தது.
உதயங்க வீரதுங்க நீதிமன்றிலும், குற்றப்புலானாய்வு திணைக்களங்கள் முன்னிலையில் கூறியு கருத்துக்களுக்கு அமையவே இந்த விசாரணை இடம்பெற்றது.
இந்நிலையில், இலங்கையில் ஆட்சிமாற்றம் இடம்பெற்ற பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆம் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன், ஊடகவியலாளர்; லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் மரணம், கேலிச்சித்திர செய்தியாளர் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |