கோட்டாபயவின் அதிரடி முடிவு! வரலாற்றில் முதலாவது நபராக இணையும் வாய்ப்பு
நாட்டின் மகாநாயக்க தேரர்கள் தற்போதைய அரசாங்கத்தின் தீர்மானங்களில் நேரடித் தாக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பாதுகாப்புச் செயலாளராகப் பெரும் பங்காற்றிய அவர், பின்னர் மக்கள் போராட்டத்தினால் பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறிய முதலாவது ஜனாதிபதியாகவும் வரலாற்றில் பதிவானார்.
மேலும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது கொழும்பு நகரை நவீனமயப்படுத்திய பெருமையும் அவருக்கு உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
தவறான ஆலோசனை
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மக்கள் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புகள் இருந்தபோதிலும், அவரைச் சூழ்ந்திருந்த நெருக்கமானவர்களின் தவறான ஆலோசனைகளால் பெரும் மக்கள் எதிர்ப்பு எழுந்தது.

இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய பின்னர், அவர் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலோ அல்லது பொது நிகழ்வுகளிலோ கலந்து கொள்ளாமல் மிகவும் அமைதியான போக்கைக் கடைப்பிடித்து வந்துள்ளார்.
தற்போது கிடைத்துள்ள நம்பகமான தகவல்களுக்கமைய, கோட்டாபய பௌத்த தத்துவத்தில் அதிக நாட்டம் கொண்டு தனது நேரத்தைச் செலவிடுவதாகக் கூறப்படுகிறது.
வெளிநபர்களுடன் தனது தொடர்பை முடிந்தவரை குறைத்துக்கொண்ட அவர், தனது பெரும்பாலான நேரத்தை தியானத்தில் செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
துறவறத்தில் நுழைவதற்கான அதிக வாய்ப்பு
கூடுதலாக, பௌத்த தத்துவம் மற்றும் ஆழ்ந்த தியான முறைகள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களைப் படிப்பதிலும், அவற்றில் உள்ள தர்மத்தைப் படிப்பதிலும் அவர் மிகவும் ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி துறவறத்தில் நுழைவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகின்றது.
ஒருவேளை அவர் துறவறம் பூணும் முடிவை எடுத்தால், இலங்கை வரலாற்றில் இல்லறத்தைத் துறந்து சங்கத்தில் இணையும் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய பதிவாகுவார் என குறிப்பிடப்படுகின்றது.