இலங்கை திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ச - வெளியாகியுள்ள தகவல்கள்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்பவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறி சிக்கப்பூரில் தங்கியுள்ளார்.
கடந்த 14ம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய அவர் இலங்கைக்கு சேவை செய்ய காத்திருப்பதாக தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்ற நிலையில் அந்நாட்டில் புகலிடம் கோரியதாக தகவல்கள் வெளியாகின்.
எனினும், இதனை சிங்கப்பூர் அரசாங்கம் முற்றாக மறுத்திருந்தது. கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக இந்த பயணத்தினை மேற்கொண்டுள்ளதாக அறிவித்து சிங்கப்பூர் அரசாங்கம் அவர் நாட்டில் தங்கியிருக்க 14 நாட்கள் விசா வழங்கப்பட்டதாகவும் அறிவித்தது.
விரட்டியடிக்கப்பட்ட போராட்டகாரர்கள்
இந்நிலையில், கடந்த 28ம் திகதியுடன் அவருக்கான விசா காலம் முடிவடைந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவின் விசா காலத்தை மேலும் 14 நாட்கள் நீடிப்பை சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கியது.
இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சிங்கப்பூரில் இருந்து எதிர்வரும் 11ம் திகதி இலங்கை வரவுள்ளதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவு வழங்கியது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் படையினரை கொண்டு விரட்டியடிக்கப்பட்டனர்.
அத்துடன் அவசர கால சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது மக்களின் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள பின்னணியிலேயே கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.