இலங்கை இராணுவத்தையே நம்பாத கோட்டாபய! தப்பியோடியதன் பின்னணியில் வெளிவரும் தகவல்கள்
இலங்கை அரசாங்கம் தனது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரைப் பாதுகாக்க ஒரு நட்பு வெளிநாட்டின் உதவியை நாடுவது நல்லதல்ல என்று ஊடக வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தாய்லாந்து குறித்தே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இது இலங்கையின் பாதுகாப்பை கேள்விக்குறியதாக்கியுள்ளதை உலகுக்கு ஒப்புக்கொள்ளும் விடயமாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டாபயவின் புறக்கணிப்புகள்
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டார். யாரும் அவரை அவ்வாறு செய்யுமாறு கேட்கவில்லை. போராட்டக்காரர்கள் அவரை பதவி விலகுமாறு கோரினர். எனினும் பயத்தின் காரணமாக, வெளிநாடு செல்ல வேண்டும் என்பது அவரின் தனிப்பட்ட முடிவாகவே இருந்தது.
அறிவுரைகள் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கைகளை அவர் அப்பட்டமாக புறக்கணித்தார் என்று இலங்கையின் பாதுகாப்பு உயர் மட்டத்தில் குற்றம் சுமத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடந்த பின்னர், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படைத் தளபதியின் சொகுசு உத்தியோகபூர்வ பங்களாவில் பாதுகாப்பு கிடைத்தது. ஏன் இதனை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்பது தற்போது கேள்வியாக எழுப்பப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதாரச் சரிவு எவ்வாறு ஏற்பட்டது என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் கொழும்பில் இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், தற்போதைய இக்கட்டான நிலையை அவர் தவிர்த்திருக்கலாம். கோட்டாபய ராஜபக்சவுக்கு இப்படியொரு அவமானமான கதி ஏற்படும் என்பதை அவரது எதிரிகள் கூட எதிர்பார்க்கவில்லை.
தனிபட்ட தீர்மானங்கள்
அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, பல்வேறு பிரச்சினைகளுக்குத் தனது முழு அதிகாரத்தையும் ஆளுமையையும் கொண்டு செயற்பட்டார். எனினும் ஜனாதிபதியானபோது, அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.
அரச சேவை அதிகாரிகளை புறக்கணித்து ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமித்தார். அவர்களில் பெரும்பாலோர் தகுதியற்றவர்கள், பல்வேறு முக்கிய பதவிகளில். அவர் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களை துண்டித்துக்கொண்டார், அவர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.
அடிமட்டத்தில் உள்ள சாதாரண மக்களுடன் தொடர்பு கொள்ள வழிவகுத்த பிலிசந்தர என்ற 'மக்களை சந்திப்போம்' திட்டத்தை கைவிட்டார். லஞ்சமும் ஊழலும் பெருக அனுமதித்தார். அவரது சொந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோடிக்கணக்கில் பணம் பறித்து வெளிநாடுகளில் குவித்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
தோல்வியுற்ற ஜனாதிபதி பதவியை விட்டு விலக மாட்டேன் என்று அவர் சபதம் செய்தார்.
இறுதியில்,சொந்த நாட்டின் பாதுகாப்பை புறக்கணித்து சென்ற கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது உயிருக்கு பயந்து நகர்ந்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.