கொடூர தாக்குதல் வரிசையின் பின்னணி அடுத்து கோட்டாபய ராஜபக்ச! சிக்கவுள்ள பல சூத்திரதாரிகள்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.

நேற்றிரவு ஆரம்பமான தொடர் கைது நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் சிக்க இன்னும் பலர் வரிசையில் இருப்பதாகவும், இவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகத் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடமை தவறியமை மற்றும் சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் பிரதானிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பொறுப்புக்கூற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, பிரதான புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே, தேசபந்து தென்னகோன் மற்றும் அசாத் மௌலானா உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கடுமையான சட்ட நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் ஆட்சியைத் தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுரேஷ் சலேவை அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக்கி, அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.

இதன் மூலம் ஆதாரங்களை அழிப்பதற்கும், ஷானி அபேசேகர போன்ற நேர்மையான புலனாய்வு அதிகாரிகளைப் பழிவாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த வாரம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், சதித்திட்டம் ஒன்றுக்கு துணையாகச் செயற்படும் எந்தவொரு அரச அதிகாரிக்கும் கிடைக்கும் அதிகபட்ச தண்டனை என்னவென்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் கௌரவிக்கின்றோம்.
இந்த சம்பவங்களின் பின்னணியில் இருந்த இராணுவ மற்றும் அரசியல் சூத்திரதாரிகள் அனைவரும் எதிர்வரும் காலங்களில் சட்டத்தின் முன் தண்டனையைப் பெறுவது உறுதி. அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது என்றும், அநுர குமார தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri