கோட்டாபயவைப் போன்று சதி வலைக்குள் சிக்கும் அநுர! விளைவு விரைவில்..
2019ஆம் ஆண்டு மக்கள் கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கிய ஆணையை பசில் ராஜபக்ச கொள்ளையடித்ததைப் போன்று தற்போது அநுரவுக்கு வழங்கப்பட்ட ஆணையும் கொள்ளையடிக்கப்படுகின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொள்ளையடிக்கப்படும் ஆணை..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அரசியல் பிரசாரமாக்கி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். ஆனால் கோட்டாபயவிற்கு மக்கள் வழங்கிய ஆணையை பசில் ராஜபக்ச கொள்ளையடித்தார்.
இதனையடுத்து நாடு மிக மோசமான நெருக்கடிக்குள்ளானது, பின்னர் கோட்டாபய ராஜபக்சவை நாட்டு மக்கள் விரட்டியடித்தார்கள்.
அதன்பின்னர், அரசியல் கட்டமைப்பின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த வெறுப்பை சாதகமாக பயன்படுத்தி அநுரகுமார ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார்.
தற்போது ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளார்கள்.
இதன் பலனை அரசாங்கம் வெகுவிரைவில் விளங்கிக் கொள்ளும். தேசிய மற்றும் சர்வதேச அரசமுறை கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் எவ்விதமான புதிய திட்டங்களும் கிடையாது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று நாட்களை கடத்துவதை மாத்திரம் அரசாங்கம் பிரதான பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
