அதிகரித்த வாகன இறக்குமதியால் ஏற்படப் போகும் சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்பார்த்ததை விட அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையால் ஏற்படப் போகும் பாதக நிலை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களில் 18,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன் வரி வருமானமாக 220 பில்லியன் ரூபா கிடைத்துள்ளதாகச் சுங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களில் 742 டொலர் மில்லியன் கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் வைப்பு
இந்த ஆண்டுக்காக வாகன இறக்குமதிக்காக 1000 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு தனியார் வாகன இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 22 மாதங்கள் எந்தவித வாகனங்களும் இறக்குமதி செய்யப்படவில்லை.
பெப்ரவரி 01ஆம் திகதி முதல் தனியார் பாவனைக்கான வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. ஆண்டில் 5 அல்லது 6 மாதங்களுக்குள்ளாக மத்திய வங்கி சுமார் 800 மில்லியன் டொலரை வைப்புக்காக பெற்றுக் கொண்டுள்ளது. அதில் சாதாரண மக்களுக்காக பயன்படுத்தும் தொகையிலே குறைவு ஏற்படப்போகிறது.
எனினும், அரசாங்கம் வாகனத்தின் தொகை எவ்வாறு இருந்தாலும் 1000 மில்லியன் டொலர் வாகன இறக்குமதிக்காக ஒதுக்கியுள்ளது என்று பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
