கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள மறதி நோய்.. நீதிமன்றத்தில் தடுமாறிய நிலை
வடக்கில் கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்ட லலித் குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான சம்பவத்தை மையமாகக் கொண்டு சட்டத்தரணிகள் எழுப்பிய பல கேள்விகள் தொடர்பில் தமக்கு நினைவில் இல்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
லலித் குமார் குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவான் போபகே உள்ளிட்ட குழுவினர் கோட்டபாயவிடம் கேள்வி எழுப்பினர்.
நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் லலித் மற்றும் குகன் ஆகியோர் கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்டனர் என சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஆவண ரீதியான சாட்சியங்கள்..
பல கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கோட்டாபய அறிந்திருந்தாரா என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதன் போது தமக்கு அந்த விடயம் நினைவில் இல்லை என கோட்டாபய பதில் அளித்துள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் கோட்டாபயவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
குறிப்பாக ஊடகவியலாளர் கீத் நோயார் உள்ளிட்ட சிலர் கடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விவகாரங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை என கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலும் தெற்கிலும் இடம் பெற்ற பல்வேறு கடத்தல் சம்பவங்கள் தொடர்பான ஆவண ரீதியான சாட்சியங்களை கோட்டாபயவிடம் வழங்கி அவற்றை அவர் வாசிக்க செய்து சம்பவங்கள் குறித்து நினைவூட்ட நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
லலித் குகன் விவகாரம்
இதன்படி சில முக்கியமான சம்பவங்கள் தொடர்பான எழுத்து மூலமாக ஆவணங்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவிற்கு வழங்கப்பட உள்ளதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.

கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையிலும் பாதுகாப்பு பேரவையின் பிரதானி என்ற வகையிலும் கோட்டபாயவின் வகிபாகமும் சம்பவங்கள் குறித்து அவர் அறிந்திருந்தாரா என்பது குறித்து இன்று கேள்வி எழுப்பப்பட்டதாக சட்டத்தரணி போபகே குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வழக்கு விசாரணையின் போதும் இந்த விடயம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்பப்படும் என்பதற்கு லலித் குகன் விவகாரம் ஓர் முக்கிய அடையாளமாக காணப்படுகிறது எனவும் இது நீதி விசாரணைக்கான ஓர் குறியீடு ஆகும் எனவும் சட்டத்தரணி நுவான் போபகே ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS..