கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! மகிழ்ச்சியில் பயனர்கள்..
கூகுள் நிறுவனம், அதன் மொழிபெயர்ப்பு மற்றும் மொழி கற்றல் சேவைகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பயனர்கள் ஹெட்ஃபோன்கள் வழியாக நிகழ்நேர மொழிபெயர்ப்புகளைக் கேட்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
கூகுள் மொழிபெயர்ப்பு செயலி வழியாகக் கிடைக்கும் இந்த வசதி, பேச்சாளர்களின் குரல் தொனி, அழுத்தம் மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதோடு, உரையாடல்களைப் பின்தொடர்வதை எளிதாக்குகிறது.
கூகுளின் தயாரிப்பு
"நீங்கள் வேறு மொழியில் உரையாட முயற்சித்தாலோ, வெளிநாட்டில் ஒரு உரை அல்லது விரிவுரையைக் கேட்டாலோ, அல்லது வேறு மொழியில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தைப் பார்த்தாலோ, இப்போது அதனை நீங்கள் உங்கள் ஹெட்ஃபோன்களைப் மாட்டிக்கொண்டு, டிரான்ஸ்லேட் செயலியைத் திறந்து, 'Live translate' என்பதைத் தட்டி, உங்களுக்குப் பிடித்த மொழியில் நிகழ்நேர மொழிபெயர்ப்பைக் கேட்கலாம்," என்று கூகுளின் தயாரிப்பு மற்றும் தேடல் துணைத் தலைவர் ரோஸ் யாவோ வலைப்பதிவு இடுகையொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த பீட்டா அம்சம் தற்போது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள எண்ட்ராய்ட் சாதனங்களில் கிடைக்கிறது.
இதனை தமிழ் உட்பட 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் பெறமுடியும் மேலும், இது எந்தவொரு ஹெட்ஃபோன்களுடனும் இணக்கமானது.
இந்த அம்சத்தை 2026 ஆம் ஆண்டில் ஐஓஎஸ் சாதனங்களுக்கும் மேலும் பல நாடுகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.