அறிமுகமாகும் கூகுள் மேப்ஸ் செயலியின் புதிய பரிமாணம்
கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்ஸ் (google maps) செயலியானது மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது கூகுள் மேப்ஸில் முப்பரிமாண காட்சியை (3D view) காட்டும் வசதி விரைவில் கொண்டு வரப்போவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முப்பரிமாண காட்சி (3D view) தொழில்நுட்பம் மூலம் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து கீழே பூமி எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு வாகனத்தை செலுத்தலாம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான நியூரல் ரேடியன்ஸ் பில்டன்ஸ் (NeRF) மற்றும் கம்ப்யூட்டர் விஷன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் ஒவ்வொரு இடத்திலும் ஒளியின் வெளிச்சத்தை துல்லியமாக அறிந்து கொண்டு பொருட்களின் அமைப்பையும் தெளிவாக காட்டும்.
மேலும் சாலைகளில் உள்ள பாதைகள், சாலை குறுக்கீடுகள், வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அளவு என்பதை புதிய தொழில்நுட்பம் மூலம் கூகுள் மேப்ஸில் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.
கற்பனை காட்சி
இதேவேளை சாலைகளில் எந்தெந்த நேரத்தில் எவ்வளவு கூட்ட நெரிசல் இருக்கிறது என்பதையும் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
அதாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தை உள்ளீடு செய்தால் அதே சாலையில் வாகனங்கள் கற்பனையாக உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.
இது தவிர வெப்பநிலை மற்றும் காற்றின் தரம் என்பவற்றை அறிந்துகொள்ளும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதிகள் உலகில் 15 முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |