தென்னிலங்கையின் மாணவனின் துணிகர செயல் - பொலிஸார் பாராட்டு
ஹொரண பிரதேசத்தில் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற திருடர்களை சிறுவன் ஒருவர் துணிகரமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளார்.
திருடர்கள் மீது சைக்கிளை வீசிய 16 வயதுடைய பாடசாலை மாணவனின் துணிச்சலான செயற்பாட்டினால் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்களிடம் இரண்டு தங்க சங்கிலிகள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தங்க நகை திருட்டு
கடந்த 16ஆம் திகதி மதியம் ஹொரணை வாவல கந்தரவத்தை வீதியில் பழக்கடை நடத்தி வரும் பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலவந்தமாக பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.
இதற்கிடையில், பாடசாலை மாணவரான அவரது 16 வயது மகன் சம்பவத்தை பார்த்துவிட்டு, தான் வந்த சைக்கிளை திருடர்களின் உடல் மீது வீசிவிட்டு, மோட்டார் சைக்கிளின் சாவியை கையில் எடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஹொரண தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் குழுவொன்று உடனடியாக குறித்த இடத்திற்கு வந்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் புலத்சிங்கள நரகல பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.