உலக சந்தையில் வரலாறு காணாதளவில் அதிகரித்த தங்கத்தின் விலை
அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி காரணமாகத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது இன்று (21) 4,800 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்து வரலாற்று சாதனை அளவை தாண்டியுள்ளது.
பலவீனமடையும் டொலரின் மதிப்பு
நேற்றைய தின இறுதியில் 4,730 டொலர்களாகக் காணப்பட்ட தங்கம் விலை, இன்று ஆசிய வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் 4,800 டொலர்களை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

உலகளாவிய பொருளாதாரச் சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான புகலிடமாக நாடுவதால் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் தங்க விலை நிலவரம்
இதேபோல், உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இன்று காலை தங்கத்தின் மொத்த விலையில் 10,000 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்று, ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ. 351,500 ஆகவும், "24 கரட்" தங்கத்தின் விலை இன்று ரூ. 380,000 ஆகவும் உயர்ந்துள்ளதாக தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.