15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் ஒருவர் கைது
ஹல்பதொட்ட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான தங்க நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி - ஹல்பதொட்ட பகுதியில் மீட்டியகொட பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான தங்க நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று(13) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
சுற்றிவளைப்பின் போது கைப்பற்றபட்ட பொருட்கள்
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கடந்த 2ஆம் திகதி மீட்டியகொட - அளுத்வல பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து திருடப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, 8 தங்க வளையல்கள், 5 கழுத்தணிகள், 3 மோதிரங்கள், 3 ஜோடி காதணிகள் மற்றும் 4
கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
குறித்த சந்தேகநபர் 31 வயதுடையவர் என்றும் பத்தேகமவில் உள்ள அடகுக் நிலையம் ஒன்றில் இரண்டு தங்க நகைகளை அடகு வைத்துள்ளார் என்றும் பொலிஸார் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் மேலும் சில நபர்கள் தொடர்பட்டுள்ளனரா? என்று பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.