கோடி ரூபா பெறுமதியான திருக்கோணேஸ்வரர் ஆலய தாலி : விசாரணைகள் தீவிரம்
தமிழர் தலைநகரமாக அடையாளப்படுத்தப்படும் திருகோணமலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் தான் திருக்கோணேஸ்வரம்.
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வர ஆலயம் ஆன்மீகத்திற்கு மாத்திரம் அல்ல தமிழர் வரலாற்றுக்கும், அதன் அமைவிடத்திற்கும் சிறப்பு பெற்றது. ஈசன் புகழ் அறிந்து தேடி வருவோர் முதல், அறிந்து கொள்ள தேடி வரும் மேலை நாட்டு சுற்றுலாப் பயணிகள் வரை திருக்கோணேஸ்வரத்தின் புகழ் பாடாதோர் இல்லை.
களவுபோன தாலி..
திருக்கோணேஸ்வரர் ஆலயமும், அதன் புகழும் சிறப்புக்களும் புவி எங்கும் பரவிக் கிடக்க தற்சமயம் ஆலயம் தொடர்பில் கவலையளிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சோழர் காலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் போற்றிப் பாதுகாக்கப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான தாலி களவுகொடுக்கப்பட்டுள்ளது.
இந்தசம்பவம் இலங்கையில் பரபரப்பாகவும், பேசுபொருளாகவும் மாறியுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ள நிலையில், ஆலய நிர்வாகத்தினர் இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களை அமைதிப்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகின்றது.
பல நூறு கோடி ரூபா பெறுமதியான ரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 பவுண் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விடயம் குறித்து மாவட்ட செயலாளர், அரசாங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ள்ளது.
பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பாக தொல்பொருள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதுடன், பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஆனால், இதுவரையில் திருக்கோணேஸ்வரம் ஆலயம் சார்பில் ஒருவரும் முறைப்பாடு செய்யவில்லை என்று பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 10 கோடி ரூபா திருக்கோணேஸ்வரர் ஆலய அபிவிருத்திக்காக இந்திய அரசால் வழங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அப்படி ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுகின்றமை தொடர்பில் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் திருடிச்செல்லப்பட்டுள்ள தாலி தொடர்பான விசாரணைகளை திசை திருப்பி விடும் செயற்பாடாக பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |