இலங்கை- இந்திய அரசுகள் பேச்சுவார்த்தை மூலம் கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு - சிறிநேசன் கோரிக்கை
இலங்கை அரசும், இந்திய அரசும் நினைத்தால் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு சுமூகமான ஓர் தீர்வை வழங்க முடியும் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (03.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அரசும், இந்திய அரசும் நினைத்தால் சுமூகமான ஓர் தீர்வை வழங்க முடியும். இருந்தாலும் தொப்புள் கொடி உறவுகளுக்குள் மீண்டும் மீண்டும் மோதல்களை உருவாக்க இலங்கை அரசு முனைகிறது.
இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் வாழ்வாதாரத்திற்காகவே கடற்றொழிலை மேற்கொள்கின்றனர். எனவே இதனை இரு தரப்பு கடற்றொழிலாளர்களும் சிந்தித்து தீர்வுகாண வேண்டும்.
மேலும் இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், என இந்திய கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் குறிப்பாக இரு தரப்பு கடற்றொழிலாளர்களும் கவனமாக செயற்பட வேண்டும்.
உணர்வு ரீதியான, உண்மை ரீதியான போராட்டத்தை இலங்கை மற்றும் இந்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டவிரோதமான முறை
இதில் பிரதான பிரச்சினை இந்திய கடற்றொழிலாளர்கள் இழுவைமடி வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்களைச் சூறையாடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இருதரப்பு கடற்றொழிலாளர்களும், இருதரப்பு அரசுகளும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினை இலகுவாக தீர்க்கவேண்டும்.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிகவும் சசுலபமாக, இப்பிரச்சினையை தீர்க்க முடியும். அவர் இப்பிரச்சினைகளை நன்கு அறிந்தவர், எனவே இதனை இழுத்தடிப்பு செய்யாமல் இதற்கான பூரணமான தீர்வை அவர் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இருதரப்பு கடற்றொழிலாளர்களும் தத்தமது எல்லைக்குள் சட்டரீதியான வலைகளை பயன்படுத்தி கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை சிறப்பித்து வாழ்வதற்கு அரசுகள் உதவ வேண்டும்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |