மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து வெளியான அறிவிப்பு
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வந்த மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடாத்த சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ள நிலையில் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மருத்துவர்களின் இடமாற்றங்கள் மற்றும் மருத்துவ பயிற்சி முடித்தவர்களின் நியமனங்கள் தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.
வேலைநிறுத்தம் காரணமாக வழக்கமான மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவசர சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டன.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலை முன்னிட்டு வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அந்த சந்திப்பின் முடிவை பொருத்தே அடுத்தடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பல முறை இந்த வேலைநிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவர்களின் இடமாற்ற செயல்முறைகள் குறித்து உரிய தீர்வு வழங்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
அதேவேளை, நியமன செயல்முறை திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.