வன்னியில் பூத்துக்குலுங்கும் காந்தள் மலர்கள்.
வன்னி நிலப்பரப்பெங்கும் கார்த்திகை மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. கார்த்திகை மழைக்காலத்தில் ஆரம்பமாகும் கார்த்திகை செடியின் பூத்தல் மழைக்கால அதிகரிப்போடு அதிகரித்துச் செல்லும் இயல்புடையது.
தொடர்சியாக கிடைத்து வந்த மழை வீழ்ச்சியின் பயனாக இம்முறை அதிகளவிலான கார்த்திகை செடிகளின் வளர்சியை அவதானிக்க முடிகின்றது.
வன்னியின் காடுகள் மட்டுமல்லாது விளைநிலங்களை சார்ந்த பகுதிகளிலும் கார்த்திகை செடி வளர்ந்து பூத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
சிவப்பு, மஞ்சள் நிறங்கள்
சிவப்பு, மஞ்சள் நிறங்களை அதிகளவில் கொண்டுள்ள கார்த்திகை பூ கார்த்திகை மாதத்தில் பூக்க ஆரம்பிக்கின்றது.
மாவீரர்களை நினைவில் கொண்டு அவர்களை வணங்கி போற்றும் கார்த்திகை 27 மாவீரர் நாளினையும் கார்த்திகை மாதம் ஒருசேர கொண்டுள்ளதால் ஈழத்தமிழர்களிடையே கார்த்திகை பூ மீது அதிக நாட்டம் காணப்படுகிறது.
ஈழத்தமிழர்களின் தேசிய உணர்வை வெளிப்படுத்தி நிற்கும் உன்னத மலராக கார்திகைப் பூ விளங்கி வருகின்றது.
பயிரிடப்படும் கார்த்திகைச் செடி
கார்த்திகை பூச்செடி பெருமளவில் வியாபார நோக்கில் பயிரிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதிக மருத்துவக் குணங்களைக் கொண்ட மூலிகைச் செடியாக இது விளங்குகின்றது.
கண்வலிக்கிழங்கு எனவும் அழைக்கப்படும் இது மருத்துவப் பயன்பாட்டுக்காக இதன் கிழங்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. வேரில் உணவு சேமிக்கும் ஒருவித்திலைத் தாவரமாக கார்த்திகை செடி அமைந்துள்ளதும் நோக்கத்தக்கது.
கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு எனவும் இக்கிழங்கு பொதுவாக அழைக்கப்பட்டு வருகின்றது.
இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாக இருக்கின்றன. இதன் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகள் இந்தியாவில் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கார்த்திகை செடியை அதிகளவில் வணிக நோக்கங்களுக்காக இந்தியாவிலேயே பயிரிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
பெயரும் காரணமும்
கார்த்திகை பூச்செடி அதன் ஒவ்வொரு பகுதியினதும் சிறப்புக்களால் வெவ்வேறு காரணப்பெயர்களால் அழைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பூ தீக்கொழுந்து போல இருப்பதால் அக்கினிசலம் எனவும் இதன் கிழங்கு கலப்பை வடிவமாக இருப்பதால் கலப்பை எனவும் அழைக்கப்படும்.
இலைகளின் முனை சுருண்டு இருப்பதால் தலைச்சுருளி என்றும் இது பற்றி ஏறுவதால் பற்றி எனவும் அழைக்கப்படும்.
வளைந்து பற்றுவதால் கோடல் எனவும் கார்த்திகை மாதத்தில் பூப்பதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது.
நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி என குறிப்பிடப்படுகிறது.
பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக குறிப்பிடப்படுவதும் உண்டு.
கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிங்களத்தில் கார்த்திகை பூச்செடி நியன்கலா என குறிக்கப்படுகின்றது.இதன் இரு சொற் பெயரிட்டு பெயர் (விஞ்ஞான முறைப்பெயர்) Gloriosa superba.L ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |