ட்ரம்பின் அறிவிப்பால் தொடர் விலை சரிவை சந்தித்துள்ள மசகு எண்ணெய்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தை முன்னேறினால் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய் விலை 5.85% குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 92.57 டொலராகப் பதிவானது. பின்னர் 7 டொலருக்கும் அதிகமாக சரிந்தது.
மிகப்பெரிய வாராந்த வீழ்ச்சி
அமெரிக்க WTI எண்ணெய் விலை 4.38% குறைந்து 86.85 டொலரானது. கடந்த வாரம் பிரெண்ட் எண்ணெய் விலை 16% சரிந்தது.இது கோவிட் -19 தொற்றுநோய் ஆரம்பித்த காலத்துக்குப் பின்னரான மிகப்பெரிய வாராந்த வீழ்ச்சியாகும்.

எனினும், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சவுதி அரேபியாவின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீதான அச்சுறுத்தல்கள் காரணமாக பிராந்திய பாதுகாப்பு அபாயங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
ஈரான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் ஏழு நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில், உலக சந்தையில் எண்ணெய் விநியோகம் அதிகரித்து வருவதும், அதிக விலையால் தேவை குறைவதும் எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.