இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய கப்பல்: தடை விதிக்கிறதா அமெரிக்கா..! வழங்கப்பட்டுள்ள விளக்கம்
அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் என்பது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது இலங்கையையோ இலக்கு வைத்து விதிக்கப்பட்டது அல்ல என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும், பணிப்பாளர் நாயகமுமான துஷார ரொட்ரிகோ அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானிய கப்பல்களுக்கு சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து வழங்கியுள்ள விளக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலைத் தடைகள்
இது தொடர்பில் அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளர் நாயகமுமான துஷார ரொட்ரிகோ கூறுகையில், அமெரிக்காவின் இந்த இரண்டாம் நிலைத் தடைகள் என்பது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது இலங்கையையோ இலக்கு வைத்துப் விதிக்கப்பட்டது அல்ல.

மாறாக, இது உலகம் முழுவதற்கும் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் சாதாரண உலகளாவிய கொள்கை மட்டுமே என தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்கினால், இலங்கை மீது தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளதாக அமெரிக்காவின் 'வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையிலேயே வௌிவிவகார அமைச்சு இந்த விளக்கத்தை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.