உலகளாவிய எரிபொருள் நெருக்கடி: ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள நடவடிக்கை
உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் அசாதாரண நிலவரம் குறித்து ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செயற்குழுவின் அவசரக் கூட்டத்தை கூட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத்துவப் பொறுப்பை வகிக்கும் அயர்லாந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்றையதினம்(02.10.2026) கிரீன்விச் நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்கும் இந்தக் கலந்தரையாடல் இடம்பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகளாவிய ரீதியில் டீசலுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளமையால், நுகர்வோர் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அவசரக் கூட்டம்
இந்நிலையைக் கருத்திற்கொண்டு, உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரான் மீதான போரின் காரணமாக உலகச் சந்தையில் டீசல் விலைகள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஐரோப்பிய நாடுகள் தம்வசம் வைத்துள்ள டீசல் கையிருப்புகளை விடுவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் அமெரிக்கா டீசல் ஏற்றுமதியைத் தடை செய்யும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
எனினும், அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தலை ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர் அன்னா-கைசா இட்கோனன் முற்றாக நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.