இலட்சியத்தை வெல்ல தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இனியாவது வாய்ப்புத் தாருங்கள்: இன்பராசா
தமிழ் மக்கள் இலட்சியத்தை வெல்ல இனிமேலாவது போராளிகளை ஆதரிக்க வேண்டும் என்று புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று(01.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரவித்த அவர், தமிழ் மக்களுக்கான அரசியல் ரீதியான போராட்டம் 75 வருடங்களையும் தாண்டி நிற்கின்றது. ஆனால், இதுவரை எமது அரசியல் ரீதியான அபிலாசைகளை வென்றெடுத்துள்ளோமா என்ற கேள்வியும், இனியும் வென்றெடுக்க முடியுமா என்ற சந்தேகமுமே இருக்கின்றது.
சிங்களப் பேரினவாதம்
காலாகாலமாக சிங்களப் பேரினவாதம் எம்மை ஏமாற்றியதை விட எமது வாக்குகளால் வந்த தமிழ் அரசியல்வாதிகளே இன்று எமது மக்களைக் கூறு போட்டு சின்னாபின்னமாக்கி, அரசியால் அநாதைகளாக்கி, இன்று மக்களே வீதியில் இறங்கி போராடுமளவிற்கு ஏமாற்றத்துக்குள்ளாக்கி இருக்கின்றார்கள்.

எமது தேசியத் தலைவரின் 35 வருடங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டத்தில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நாமும் இணைந்து போராடியிருக்கின்றோம்.
நாங்கள் எமது தேசியத் தலைவரோடு தோளோடு தோள் நின்று மரணித்த மாவீரர்களின் இலட்சியப் பாதையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இன்று ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் துணிந்துள்ளோம்.
போராளிகள்
போராட்டத்தையும், போராளிகளையும் வைத்து அரசியல் செய்யும் எமது அரசியல்வாதிகள் இன்று சுகபோக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். மனைவி பிள்ளைகளை வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருத்திவிட்டு இங்கு அரசியலுக்காக மாத்திரம் அவர்கள் செயற்படுகின்றார்கள்.
இவ்வாறான அரசியல்வாதிகள் இதுவரை தங்களுக்கான சொத்துக்களைச் சேர்த்தார்களே தவிர எமது மக்களுக்கு எள்ளளவிலான எந்தவொரு விடயத்தையும் முன்னெடுக்கவில்லை.
இந்தநிலையிலே தான் 'கொண்ட இலட்சியம் கொண்டதான கொள்கை வீரனின் காலடி மண்ணிலே நின்று போர்க்கொடி தூக்கிய போராளிகள்' எமது தேசியத் தலைவருக்கு எந்தவிதத்திலும் துரோகமிளைக்காமல் 2009 இறுதி வரைக்கும் உறுதியாக நின்று வந்த போராளிகள் நாங்கள். அதே வழியில் இன்று ஜனநாயக ரீதியில் எமது மக்களுக்காக முன்வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.