ராகம விபத்தில் சிறுமி உயிரிழப்பு! தாயும் சகோதரரும் வைத்தியசாலையில் அனுமதி
கம்பஹா - ராகம, வல்பொல தொடருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயும் சகோதரரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (22) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிகள் இருவரும் கைது
ராகமவிலிருந்து வல்பொல நோக்கி கழிவுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கார் மற்றும் லொறியுடன் மோதி பின்னர், வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தாயும் அவரது இரண்டு குழந்தைகள் மீதும் மோதியுள்ளது.
இதன்போது, தொடருந்து மார்க்கத்தில் பாதுகாப்பு வாயில் மூடப்பட்டிருந்த நிலையில், அங்கு வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் மற்றும் ஒரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு குழந்தைகளும், தாயும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி உயிரிழந்துள்ளார்.
ராகம பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் லொறி சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவுகளை ஏற்றி வந்த லொறியின் சாரதிக்குத் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.