அநுராதபுரத்தில் பௌத்த பிக்குவால் பாதிக்கப்பட்ட சிறுமி! நீதிக்கோரி யாழில் போராட்டம்
அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் தவறான செயற்பாட்டிற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதிக்கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய பின்புறத்தில் நேற்று புதன்கிழமை இந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதத்தின் பெயரால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்கக்கூடாது
அநுராதபுரத்தில் சிறுமியொருவர் பௌத்த துறவியால் தவறான செயற்பாட்டிற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மதத்தின் பெயரால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்கக்கூடாது என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் இதன்போது கோரிக்கை முன்வைத்துள்ளார்.

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசியலமைப்புச்சட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவருக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சட்டம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுள்ளது.
ஆனால் அநுராதபுரத்தில் சிறுமி ஒருவரை தவறான செயற்பாட்டிற்கு உள்ளாக்கிய பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டமை இலங்கை அரசியலமைப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கிறோம். சட்டம் அனைவருக்கும் சமமானது மாதத்தின் பெயரால் சட்டத்தை மலினப்படுத்துவதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ யாரும் முயற்சிக்கக் கூடாது.
சிறுமியின் விவகாரத்தை திசை திருப்ப முயற்சி
தெற்கை பொருத்தவரையில் இந்த சிறுமியின் விவகாரத்தை திசை திருப்பவும் பௌத்த துறவி சம்பந்தப்பட்டதால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் குரல் கொடுக்க முன்வராமை கவலை அளிக்கிறது.

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு இழைக்கப்பட்ட மிகவும் கொடூரமான அநீதியாக இந்த வன்கொடுமையை நாங்கள் பார்க்கின்ற நிலையில் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டத்தின் நீதிகோரல் தொடர்பில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் ஜனாதிபதி , நீதி அமைச்சர், சட்டமா அதிபர், பெண்கள் மகளிர் விவகார அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக மஜகரும் அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை தவிசாளரின் ஒலிப்பதிவு விவகாரம்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் - எழுந்துள்ள கண்டனம்



