பிரதேச சபை தவிசாளரின் ஒலிப்பதிவு விவகாரம்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் - எழுந்துள்ள கண்டனம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாக முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நேற்று (27.05.2026) பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தியிருந்த வாக்குமூலம்
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச சபை தவிசாளரும், பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இடையே இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த ஒலிப்பதிவை தவிசாளரே பிரதேச சபை உறுப்பினர்கள் அடங்கிய வாட்சப் குழுவொன்றில் பகிர்ந்ததாகவும், பின்னர் அது உறுப்பினர்கள் மூலம் ஊடகவியலாளர்களிடம் சென்றதாகவும் தெரியவருகிறது.
இதனைத்தொடர்ந்து அந்த ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியதுடன், செயலாளர் இடமாற்றம் தொடர்பான சர்ச்சை குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனால் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கும், அவர் சார்ந்துள்ள தேசிய மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதேசத்தில் கடுமையான எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாக தெரிவித்து கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம்
அதற்கமைய, பொலிஸாரின் அழைப்பை ஏற்று நேற்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, முறைப்பாட்டாளரான கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரையும் பொலிஸார் விசாரணைக்காக அழைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தான் தற்போது கொழும்பில் இருப்பதால் பொலிஸ் நிலையத்திற்கு வர முடியாது என தவிசாளர் தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 29.05.2026 அன்று காலை 10 மணிக்கு இருதரப்பினரையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
தவிசாளர் தாமே தனது தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை வாட்சப் குழுவில் பகிர்ந்த பின்னரே அது வெளியானதாகக் கூறப்படும் நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்திருப்பது ஊடக அடக்குமுறைக்கான முயற்சியாக பார்க்கப்படுவதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எழுந்துள்ள கண்டனம்
இதேவேளை, ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ள சம்பவம் ஜனநாயகத்திற்கும் ஊடகச் சுதந்திரத்திற்கும் எதிரான அச்சுறுத்தலாக நாம் கடுமையாகக் கண்டிக்கிறோம் என வவுனியா மாநகரசபையின் முன்னாள் துணை முதல்வரும் ஜனநாயக தேசிய கூட்டணி கட்சியின் பிரதி தலைவரும் அக்கட்சியின் வடமாகாண அமைப்பாளருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

ஒரு ஊடகவியலாளரின் கடமை உண்மைகளை வெளிக்கொணர்வதும், மக்களின் குரலை பதிவு செய்வதும் ஆகும். இவ்வாறான நிலையில் செய்தி சேகரிப்பு மற்றும் வெளியீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவரை அழுத்தம் கொடுக்கும் வகையில் விசாரணைக்கு உட்படுத்துவது ஊடகத்துறையில் அச்ச சூழலை உருவாக்கும் செயற்பாடாகும்.
சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட வேண்டியது அவசியமானதாயினும், அதனை காரணமாகக் கொண்டு ஊடகச் செயற்பாட்டாளர்களை மிரட்டும் அல்லது கட்டுப்படுத்தும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
ஜனநாயக சமூகத்தில் கருத்துச் சுதந்திரமும் ஊடகச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளாகும். ஊடகச் சுதந்திரத்தை மதிக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்றும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.