லண்டனில் தொடரும் சோகம்! - 14 வயது சிறுமி பரிதாபமாக பலி
கிழக்கு லண்டன் நெடுஞ்சாலையில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை ஓட்டிச் சென்ற 14 வயதான சிறுமி வான் ஒன்றுடன் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி இந்த விபத்து மதியம் 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஹாமில் உள்ள கிரீன் வீதியில் (Green Street) சிறுமி மின்சார ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது மினிவான் மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு குறித்த சிறுமி சாலையில் வேகமாக செல்வதை பார்த்த நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கருத்து வெளியிடுகையில்,
“அவளிடம் ஒரு பையும் சில பொருட்களும் இருந்தன, அதனால் அவள் படிக்கப் போகிறாள் என்று நான் கருதினேன். அவள் சீருடையில் இல்லை. விபத்து இடம்பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைவாக ஆம்புலன்ஸ் வண்டி வந்தது.
என்னால் அதிகமாக சொல்ல முடியாது. எனினும், அவர்களின் குடும்பத்திற்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தை அடுத்து குறித்த வீதி மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு அந்த இடத்திலேயே சிகிச்கையளிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வானின் சாரதி பொலிஸாரின் பொறுப்பில் இருக்கின்ற போதிலும் அவர் கைது செய்யப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு லண்டனில் மின்சார ஸ்கூட்டர்களில் பயணித்த 100க்கும் மேற்பட்டவர்கள் விபத்து காரணமாக பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
லண்டனில் மின்சார ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற 98 பேர் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் லண்டனுக்கான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.