ஜேர்மனியில் ரயில் தடம் புரண்டு விபத்து - பலர் பலியானதாக தகவல்
தெற்கு ஜேர்மனியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்னதுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், உயிரிழந்தவர்களின் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. மியூனிக் நோக்கிச் செல்லும் ரயில் வெள்ளிக்கிழமை மதியம் 12.15 மணியளவில் கார்மிஷ்-பார்டென்கிர்சென் என்ற நகரத்திற்கு அருகிலுள்ள பர்கிரேனில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணிகள் நிரம்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக ட்விட்டரில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை மாணவர்கள் பலர் குறித்த ரயிலில் இருந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ஒரு பெரிய அவசர சேவை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ரயில் பாதை முற்றாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.