இலங்கை அரசியலில் புரையோடிப்போயுள்ள இனஅழிப்பு நடவடிக்கை!க.ஜெகதாஸ் அடிகளார் (PHOTOS)
இந்த நாட்டில் தமது அடிப்படை உரிமையுடன் வாழ வேண்டும் என்று கோரியதற்காக அழிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் கூட்டாக இணைந்து உரிமைக்காகவும், நீதிக்காகவும் இணைந்து செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்பணி க.ஜெகதாஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜுலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு அமெரிக்க சிலோன் மிசனில் உள்ள நினைவேந்தல் அமைதி பூங்காவில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் பல்சமய ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்க சிலோன் மிசனின் மேலாளர் அருட்பணி லூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சிவபாலன் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்பணி க.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கறுப்பு ஜுலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லில் சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனையவர்களும் ஈகைச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கறுப்பு ஜுலை படுகொலை தொடர்பில் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
இலங்கையில் தமிழர்களுடைய வரலாறு
இதன்போது உரையாற்றிய அருட்பணி ஜெகதாஸ் அடிகளார்,
வன்முறை, இன அழிப்பு எனச் சொல்லப்படுகின்ற 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை 39ஆவது நினைவு நாளில் நாம் இன்று இங்கு கூடியிருக்கின்றோம். இலங்கையில் தமிழர்களுடைய வரலாற்றிலே பல்வேறு விதமான இன அழிப்புகளுக்கும், வன்கொடுமைகளுக்கும் ஈழத்தமிழர்கள் முகங்கொடுத்து வந்திருக்கின்றார்கள்.
இலங்கை பிரித்தானியர்களின் ஆளுகையிலிருந்து விடுபட்டதன் பின்னர் காலங்காலமாக ஒவ்வொரு கட்டங்களிலும் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளும், இன அழிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
1958 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்தோடு தொடங்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையானது ஒவ்வொரு புதிய கட்சி ஆட்சிபீடமேறும் போதும் தமிழர்களுக்கு எதிராக,ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிராக இனஅழிப்பு நடவடிக்கையை தூண்டிவிட்டு அவர்களை வகை தொகையின்றி கொன்றழிப்பது இலங்கை நாட்டினுடைய கலாசாரமாக அரசியலில் புரையோடிப்போன ஈனச்செயலாக இருந்திருக்கின்றது.
1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலே மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை இன்றும் கூட தமிழ் அரசியல்வாதிகள் அது இன அழிப்பா இல்லையா என்று சொல்வதற்கு ஆதாரமில்லை,சர்வதேச சட்டத்தின் மூலம் அதனை நிரூபிக்க முடியாது என்று சொல்கின்றனர்.
ஆனால் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த இனஅழிப்பை பன்நாட்டு மனித உரிமை ஆர்வலர்களும் பன்னாட்டு மனித உரிமைவாதிகளும் இது ஒரு இனத்தின் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு என்பதை மிகத்தெளிவாகச் சொல்லியிருந்தார்கள்.
39 ஆண்டுகள் கடந்தும் இந்தத் துயரமான எங்களுடைய இனம் எந்தவிதமான கேள்விகளுமின்றி கேட்பாரின்றி அரசினுடைய திட்டமிட்ட அரச பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட இந்த நாளை நாங்கள் நினைவுகூரும் வேளையிலே இது போன்ற நிகழ்வு இனியும் நடக்காது என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை.
அன்று கத்தியாலும், ஆயுதத்தாலும்,யுத்தத்தாலும் செய்தவர்கள் இன்று வேறுவிதமாக
செய்கின்றார்கள். ஆகவே நிகழ்கால எதிர்கால சந்ததியினர் விழிப்பாக இருந்து
நாங்கள் இந்தத் தேசத்திலே எங்களுக்குரிய அடிப்படை உரிமைகளோடு வாழவேண்டும்
என்று கேட்டமைக்காக மாத்திரம் அழிக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலே
எதிர்காலத்தில் எல்லோரும் கூட்டிணைந்து அழிக்கப்பட்ட இனத்தினுடைய
பிரதிநிதிகள், அழிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்கள் என்ற வகையிலே
நீதிக்காகவும் உண்மைக்காகவும் இனவிடுதலைக்காகவும் தொடர்ந்து சேயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.