பிரித்தானிய நாடாளுமன்றில் இன அழிப்பு ஆவண திரைப்பட வெளியீடு
“Continuing Cycles of Violence and Genocide in Sri Lanka” என்னும் ஆவண திரைப்படம் இன்று மாலை 6:30 மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
''இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கை இனவாத அரசினால் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வன்முறை சுழற்சி (Cycles of Violence) மற்றும் இன அழிப்பினை சர்வதேச சமூகத்துக்கு வெளிக் கொண்டு வரும் நோக்குடன் இவ் ஆவணப்படம் (Documentary Film) உருவாக்கப்பட்டுள்ளது.
காத்திரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு ஆவணங்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்றவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட இவ் ஆவணப்படமானது உலகின் பல்வேறு முக்கிய தளங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் முடிவெடுக்கும் மையங்களின் கருத்துருவாக்கம் மற்றும் இலங்கை பற்றிய கொள்கை மீள் பரிசீலனை என்பனவற்றில் தாக்கம் செலுத்தும்.
சமகால கட்டுப்பாடுகள் காரணமாக, இந்நிகழ்விற்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், கீழ் உள்ள இணைய வழியினூடாக இந்நிகழ்வில் பங்கெடுத்து உங்கள் ஆதரவை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நிகழ்வு பற்றிய விபரங்களை ஏனையோரிடம் பகிர்ந்து கொள்வதுடன், நிகழ்வு
நடைபெறும் வேளையிலேயே அவர்களைப் பார்வையிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்'' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.