அமெரிக்காவின் பிரசன்னம்! ஜெனிவாவில் களத்தில் இலங்கை சந்திக்கப்போகும் சவால்கள்
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தம்மை காப்பாற்றிக்கொள்ள , இலங்கை அரசாங்கம் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.
இதில் இந்தியா உட்பட்ட நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் தமக்கான ஆதரவை எதிர்பார்த்திருக்கிறது.
ராஜதந்திர மட்டத்தில் இதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த அமர்வுகளை போன்றே இஸ்லாமிய நாடுகளும் இந்த முறை இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அமெரிக்கா இந்த முறை ஜெனீவா அமர்வில் பங்கேற்பதால், இலங்கைக்கான முன்னைய ஆதரவிலும் கூட மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதன் ஒரு கட்டமாக தென்னாபிரிக்காவின் ஆதரவை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
இதற்காக பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் போது ஆதரவு வழங்குவது தொடர்பில் தென்னாபிரிக்காவிற்கான இலங்கையின் தூதுவர் சிறிசேன அமரசேகர தென்னாபிரிக்க அதிகாரிகளுடனும் நமீபியா, சிம்பாப்வே, மலாவி உட்பட நாடுகளின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது வெளிதரப்பினரால் திணிக்கப்படும் தீர்வுப் பொறிமுறைகளை விட உள்நாட்டு பொறிமுறைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளித்தரப்பினரின் ஈடுபாடுகள் தீர்வை காண்பதற்கு பதிலாக இனவிவகாரங்களை மேலும் முரணாக்கி விடும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரப்பினர் தமிழர் விவகாரங்களில் நேர்மையான அக்கறை கொண்டிருந்தால் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணத்தை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு உதவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களின் தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால் பொறுப்புக்கூறல் என்பது அர்த்தமற்றது என்றும் தூதுவர் சிறிசேன அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.