கொழும்பு வரும் ஜெனீவா மனித உரிமைகள் குழு
இலங்கையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கையில், மனித உரிமைகளின் உண்மை நிலையை தெரிந்துக்கொள்வதற்காக ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட குழு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் கொழும்பிற்கு வரவுள்ளது.
மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவரான ரோரி முங்கோவன் குழுவை வழிநடத்துவார். இந்தக் குழு ஜனாதிபதி விக்ரமசிங்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள்; மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளது.
இந்த குழுவினர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.
உயர்ஸ்தானிகர் மிச்செய்ல் பெச்சலெட் பதவி விலக முடிவு
தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போதைய உயர் ஸ்தானிகர் மிச்செய்ல் பெச்சலெட் இந்த மாத இறுதியுடன் பதவி விலக முடிவு செய்திருப்பதால், இந்த குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 51 வது அமர்வில் புதிய உயர் ஸ்தானிகர் அல்லது இடைக்கால உயர் ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படும்.
இதேவேளை இலங்கை தொடர்பான முக்கிய குழு (அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, கனடா, மலாவி, மொண்டெனேக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா) ஏற்கனவே பல முறை ஜெனீவாவிலும் கொழும்பிலும் முறைசாரா மற்றும் இணையத்தின் மூலம் செப்டம்பரில் மாதம் முன்வைக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தின் வாய்ப்புகள் குறித்து விவாதித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு. அமர்வுகள் செப்டம்பர் 12 அன்று ஆரம்பித்து அக்டோபர் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இதன்போது காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள்
மீதான தாக்குதல்கள் மற்றும் அமைதியான போராட்டத்தை 'மிருகத்தனமாக அடக்குதல்'
உள்ளிட்ட சம்பவங்களை முன்னிலைப்படுத்தி புதிய கடுமையான தீர்மானம் ஒன்றை 46ஃ1
என்ற பிரிவுக்குள் கொண்டு வர இந்த இலங்கை தொடர்பான முக்கிய குழு(கோர்) நாடுகள்
முயற்சிக்கின்றன.
இது இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சவாலான விடயமாகவே இருக்கப்போகிறது.