ஈழத் தமிழர்களை கொலை செய்தது இலங்கை அரசு! அங்கீகரித்து அறிவிக்குமாறு பிரிட்டன் எம்.பிக்கள் வலியுறுத்து
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது, தமிழ் மக்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. இதை பிரிட்டன் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்று பிரிட்டன் எம்.பிக்கள் இருவர் அந்த நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளனர்.
லிபரல் ஜனநாயகக் கட்சியின் எம்.பிக்கள் இருவரே புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜேம்ஸ் கிலெவெர்லியிடம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
"இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை பிரிட்டன் அங்கீகரிக்க வேண்டும்.
தடை விதிக்க வேண்டும்
போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்க வேண்டும். உள்நாட்டுப் பொறிமுறைகள் தோல்விகண்டுள்ளன என்பது தெளிவான விடயம்.
ஆதலால், பிரிட்டன் இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை அரசு தொடர்ந்தும் வழமை போல தாமதப்படுத்தும், மறுக்கும், தப்பிக்க முயலும். ஆதலால், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய முறையில் விசாரணை செய்யவேண்டும், அவர்கள் செய்த விடயங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.
தனிநபர் ஒருவர் அநீதிகளில் உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் காணப்பட்டால் மக்னிட்ஸ்கி தடைகளை பயன்படுத்துவது உட்பட பிரிட்டன் அரசு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கை தற்போது அரசியல் பொருளாதார மனித உரிமை நெருக்கடியில் சிக்குண்டுள்ளது. உணவு மருந்து எரிபொருள் போன்றவற்றுக்கான தட்டுப்பாடு நாடாளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான மக்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியொரு நிலையில் இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம். அவரது அரசின் கீழ் இடம்பெறும் ஒடுக்குமுறை குறித்த எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றோம்.
இலங்கை மக்களின் போராட்டங்களுக்கு பிரிட்டனின் ஆதரவு தேவை
இலங்கை மக்கள் சீர்திருத்தங்களுக்காக வீதிகளில் இறங்கிப் போராடும்போது பிரிட்டன் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
நெருக்கடியின் மனிதாபிமான விளைவுகளுக்குத் தீர்வு காணப்படுவதை உறுதி செய்வதற்காக எங்களின் சகாக்களுடன் இணைந்து பிரிட்டன் செயற்பட வேண்டும்.
தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடவடிக்கைகள் இடம்பெற்றன என்பதை அங்கீகரிக்கும் முக்கியமான நடவடிக்கையை நீங்கள் எடுப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.
பிரிட்டன் அரசு கடந்த கால அநீதிகளை அலட்சியம் செய்யக்கூடாது. தற்போது
இடம்பெறும் மனித உரிமைகளையும் நாங்கள் புறக்கணிக்க முடியாது" – என்றுள்ளது.