தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கிழக்கில் இல்லை! கசிந்தது தகவல்
தமிழரசுக் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் பொதுச் செயலாளருமான ப.சத்தியலிங்கத்தை நியமிப்பதற்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது சத்தியலிங்கத்தை பொதுச் செயலாளராக நியமிக்கமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வலியுறுத்தியதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்டவர்களும் இதனை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
எனினும், இதன்போது குறுக்கிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கிழக்கிற்குத்தான் வழங்கப்பட வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த மத்திய குழு கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்களும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கிழக்கிற்கே வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனினும், சிறீதரன், சுமந்திரன் உள்ளிட்டவர்கள் தற்போது சத்தியலிங்கத்திற்கே நிரந்தர பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என மீண்டும் அறிவித்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கிழக்கிற்கு வழங்கப்பட வேண்டும் என்பதை திடமாக வலியுறுத்தியுள்ளார் பீற்றர், எனினும் அந்த பதவியை வடக்கில் உள்ள ஒருவருக்குத்தான் வழங்க வேண்டும் என்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விடாப்பிடியாக இருந்த போது பீற்றர் இளஞ்செழியன் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
மேலும், கிழக்கில் உள்ள செயலாளர், யாழ்ப்பாணத்தில் வந்து தலையிடுவாரெனில் வன்னிக்கு ஒன்றும் கிடைக்காது என்றும் சிறிதரன் குறிப்பிட்டதாகவும், வடக்கும் - கிழக்கும் தான் தமிழர் தாயகம், வடக்கிற்கு வன்னி வந்துவிடும் எனவே, கிழக்கிற்கு பொதுச் செயலாளர் பதவியை வழங்குவதே சாலச் சிறந்தது என மீண்டும் தாயகக் கோட்பாட்டை பீற்றர் இளஞ்செழியன் வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.



