பொது தேர்தலை ஏன் நடத்த முடியவில்லை: நிமல் ஜி.புஞ்சிஹேவா விளக்கம்
பொது தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் தற்போது சாதகமான சூழல் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தமது நாளாந்த வாழ்க்கையை நடத்துவதற்கான தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயுவின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
மக்களின் தேவை
இதனால், மக்கள் தேர்தலை பற்றி கவலைப்படவில்லை. அதேவேளை அவர்கள் எப்படியாவது உயிர்வாழ விரும்புகிறார்கள். நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக அனைத்து மக்களும் இப்போது உணர்ச்சிவசப்பட்டு கட்டுப்பாடற்ற நடத்தைகளில் ஈடுபடுகின்றனர்.
நாட்டில் இந்த நெருக்கடியான நேரத்தில் பொது தேர்தலை நடத்த முயற்சிப்பதன் மூலம், நாட்டில் கணிக்க முடியாத மற்றும் அழிவுகரமான பயங்கரவாத சகாப்தம் உருவாக்கப்படும்.
பொது தேர்தல்
சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் இந்த நேரத்தில் பொது தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றனர், ஏனெனில் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மூலதனமாக்குவதன் மூலம் தேவையற்ற அரசியல் நன்மைகளை பெற முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு பதிலாக, தேர்தல் செலவினங்களைக் குறைப்பது தொடர்பில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிப்பது தான் இப்போதைய சூழ்நிலைக்கு சரியானது என்று நான் நினைக்கிறேன்" என புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.



