மகிழ்ச்சியளிக்கும் கிராமப்புற மாணவர்களின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் - வடக்கு ஆளுநர்
வட மாகாணத்தின் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் மகிழ்ச்சியளிப்பதாக வட மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கோவிட் சூழ்நிலையின் மத்தியிலும் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய வடக்கு மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக வடமாகாணத்தின் கிராமப்புற பாடசாலைகளிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.
கடந்தகால தரவுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சராசரியாக 70 சதவீத சித்தியை வடக்கு மாகாணம் பெற்றுள்ளது.
கோவிட் காரணமாகப் பாடசாலைகள் இயங்காத நிலையிலும் மாணவர்களுக்குக் கல்வியைப் போதிக்கும் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்திய கல்விப்புலத்தினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.