காசா பாடசாலை மீது இஸ்ரேல் சரமாரி குண்டு தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு
காசாவில் தற்காலிக குடியிருப்பாக மாற்றப்பட்ட பாடசாலை மீது நேற்று(20)இஸ்ரேலிய இராணுவம் ரொக்கெட் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மஹ்மூத் பஸ்சல்(Mahmud Bassal) வழங்கிய தகவலில், காசா நகரின் மேற்கே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து குண்டு வீசி தாக்கப்பட்ட முஸ்தபா ஹபீஸ் பாடசாலையில்(Mustafa Hafiz school) இருந்து 12 பேரின் உடல்களை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படைகள்
காசாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஹமாஸ் படைகளின் உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டு இஸ்ரேலிய படைகளுக்கு ஏதிரான தாக்குதலை முன்னெடுப்பதால் பாடசாலை குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் விளக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலையில் இருந்து கொண்டு செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் மீது இதன்மூலம் துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
பாடசாலையின் இரண்டாவது தளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் படுகாயமடைந்ததாகவும் மஹ்மூத் பஸ்சல் முன்னதாக வழங்கிய தகவலில் தெரிவித்து இருந்தார்.
உயிரிப்புகளில் சரியான எண்ணிக்கை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.