மருத்துவ சிகிச்சைக்காக எகிப்துக்கு செல்ல காசா சிறுவர்களுக்கு அனுமதி
கடந்த மே மாதத்துக்கு பின்னர் நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த சுமார் 68 சிறுவர்களும் அவர்களின் உறவினர்களும் காசா பகுதியிலிருந்து வெளியேறி மருத்துவ உதவிக்காக எகிப்துக்கு (Egypt) செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனிய (Palestine) சிவில் விவகாரங்களுக்கு பொறுப்பான இஸ்ரேலிய (Israel) இராணுவ அமைப்பு இதனை அறிவித்துள்ளது.
அமெரிக்கா (America), எகிப்து மற்றும் சர்வதேச சமூகத்தின் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவசர சிகிச்சைகள்
இதற்கமைய, குறிப்பிட்ட சிறுவர்களும் அவர்களது உறவினர்களும் கெரெம் சாலோம் வழியாக காசா பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும், ஏறக்குறைய ஒன்பது மாத கால இஸ்ரேல் - ஹமாஸ் (Hamas) போர் காசாவின் சுகாதாரத் துறையை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதுடன், பெரும்பாலான மருத்துவமனைகளை மூடுவதற்கு கட்டாயப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், நூற்றுக்கணக்கான அவசர சிகிச்சைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடக்கும் பாதை
இதன்படி, காசாவில் உள்ள 25,000 நோயாளிகளுக்கு வெளிநாடுகளில் சிகிச்சை தேவைப்படுவதுடன் இதில் சுமார் 980 சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காசாவிற்கும் எகிப்திற்கும் இடையே உள்ள ரஃபா குறுக்கு வழியே, மக்கள் உள்ளே அல்லது வெளியே செல்ல ஒரே ஒரு வழியாக உள்ளது.
கடந்த மாத ஆரம்பத்தில், காசாவில் இஸ்ரேலியப் படைகள் தங்கள் நடவடிக்கையின் போது இந்த பாதை மூடப்பட்டது.
அத்துடன், காசா பகுதி பாலஸ்தீனிய கட்டுப்பாட்டிற்கு திரும்பும் வரை, கடக்கும் பாதையை மீண்டும் திறக்க எகிப்தும் மறுத்துவிட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |