எரிவாயு தட்டுப்பாடு மே இறுதி வரை:எரிவாயு விநியோகத்தில் நகரங்களுக்கு முன்னுரிமை
நாட்டில் தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினை எதிர்வரும் மே மாத இறுதியில் முடிவுக்கு வந்து விடும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலத்தில் இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் லிற்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களுக்கு தேவையான நிதி வசதிகளை பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் ஷொயான் சேமசிங்க கூறியுள்ளார்.
அத்துடன் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் மேலும் சில விநியோகஸ்தர்களை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய உலக வங்கி 99 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.
லிற்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களின் சந்தை அளவுக்கு ஏற்ப நிதி பகிர்ந்தளிக்கப்படும் என அமைச்சர் சேமசிங்க கூறியுள்ளார்.
சமையல் எரிவாயுவை பயன்படுத்துவோரில் 25 சத வீதத்தினர் நகரங்களில் வசிப்பதால்,இனிவரும் காலங்களில் எரிவாயு விநியோகத்தின் போது நகரங்களில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் லிற்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் தினமும் 60 ஆயிரம் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் அதனை 30 ஆயிரமாக குறைக்க நேரிடும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.