லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பதவி விலக காரணம் என்ன:தகவல் வெளியிட்டுள்ள சமிந்த விஜேசிறி
அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்வதை நிராகரித்தன் காரணமாகவே லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித் ஹேரத்திற்கு அந்த பதவியில் இருந்து விலக நேரிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதிக விலைக்கு கொள்வனவு செய்யுமாறு அழுத்தம்
கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய எரிவாயு விலை அதிகரித்ததன் காரணமாக அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்யுமாறு எவரோ, நிறுவனத்தின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
எனினும் நாட்டில் நிலவும் நிலைமைக்கு அமைய மக்கள் எதிர்நோக்கியுள்ள கஷ்டமான நிலைமையின் அடிப்படையில், அப்படியான யோசனைக்கு இணங்க முடியாது என்ற காரணத்தினால், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அவசரமாக பதவியில் இருந்து விலகியுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை ஒதுக்கி வைத்து விட்டு, தனிப்பட்ட தேவைகளுக்காக குரல் கொடுக்கும் பிரதமரும் அமைச்சரவையும் இருக்கின்றது.
உண்மையை வெளியிட வேண்டும்
நாட்டில் ஏற்பட்டுள்ள மின் சக்தி, எரிசக்தி,டீசல் மற்றும் எரிவாயு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போல் நாடாளுமன்றத்தில் நேற்று வரை நடித்து, தமது உற்ற நண்பர்களுக்கு தேவையான வகையில் தரகு பணத்தை பெற்றுக்கொள்வதற்காக சட்டதிட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பதவி விலகுவதற்கும் இதுவே காரணம். அவர் இந்த உண்மையை ஊடகங்கள் வாயிலாக நாட்டுக்கு தெரியப்படுத்துவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
எரிவாயு விலை அதிகரித்துள்ளதால், அதிக விலைக்கு கொள்வனவு செய்யுமாறு இடப்பட்ட உத்தரவை மறுத்தன் காரணமாகவே அவர் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார் எனவும் சமிந்த விஜேசிறி கூறியுள்ளார்.