இலங்கையில் பலர் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்
சுமார் 20 சதவீதமான பாரிய ஆடைத் தொழிற்சாலைகளை அடுத்து வரும் சில மாதங்களுக்குள் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதென சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதுவரையிலும் சுமார் 50 சதவீத சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து பெறப்படும் ஓர்டர்கள் குறைந்து, செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆடைத் துறையில் முதலீட்டாளர்களின் வருமானம் 25 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணி நீக்கம்
சில உள்ளூர் முதலீட்டாளர்கள் இந்தச் சூழ்நிலையின் அடிப்படையில் மற்ற நாடுகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறுகிறார். சில முதலீட்டாளர்கள் தொழிலாளர்களுக்கு இழப்பீடு மற்றும் பணி நீக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்போது சுமார் 10 பெரிய நிறுவனங்கள் இவ்வாறு நஷ்டஈடு செலுத்தி ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, சில நிறுவன உரிமையாளர்கள் தமது ஊழியர்களுக்கு முழுமையாகவோ அல்லது பகுதியளவோ சம்பளம் வழங்கி அவர்களை வீட்டில் இருக்குமாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில தொழிற்சாலைகள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் என்றும், சில நிறுவனங்கள் ஒரு வாரம் மட்டுமே செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓர்டர்கள் குறைவது மட்டுமின்றி, மின் கட்டணம் உள்ளிட்ட ஏனைய செலவுகள் பெருமளவில் அதிகரித்தாலும், உரிய விலை கிடைக்காததால், முதலீட்டாளர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக, துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பல நாடுகள் மிகக் குறைந்த விலையில் சேவைகளை வழங்குவதால் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் ஏனைய நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலையில் உள்ளதாகவும் தம்மிக்க பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.