இலங்கையில் வரி செலுத்தாதோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : அடுத்த வருடம் முதல் புதிய நடைமுறை
உலகில் மிகக் குறைவாக வரி அறவிடும் நாடுகளில் இலங்கை 08 ஆவது இடத்தில் உள்ளது. வரிக் கட்டாமல் நழுவிச் செல்வோரை வரி செலுத்தும் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதோடு, அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தினை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கவுள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் பணவீக்கத்தை எம்மால் கட்டுப்படுத்த முடிந்தது. 70 % ஆக இருந்த பணவீக்கம் -2.5 % வரை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்பேது, இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதன் உடாக நாம் சரியான பாதையில் பயணிக்கின்றோம் என்பது புரிகின்றது.
புதிய முதலீடுகள் அவசியம்
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, பொருட்களின் விலைகள் பாரிய அளவில் குறையாவிட்டாலும் அதன் அதிகரிப்பு வேகத்தை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம்.
எம்மால் அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். அதன் பலன்களை மக்களே எதிர்கொள்ள நேரிடும். எவ்வாறாயினும் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள புதிய முதலீடுகள் அவசியம்.
தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். தொழில் சந்தைக்கு ஆக்கத்திறன் மிக்க இளம் சமூகம் உள்வாங்கப்பட வேண்டும்.
இம்முறை வரவு செலவுத் திட்டம் மேற்படித் திட்டங்கள் உள்ளடங்களாக எதிர்கால இலக்குகளை கருத்திற்கொண்டு முன்மொழியப்பட்டுள்ளது. எனவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இந்நாட்டை புதிய பொருளாதார கட்டமைப்புக்குள் இட்டுச் செல்லும்.
அதேபோல் டிஜிட்டல் மயமாக்கலுக்காக இம்முறையும் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணியை செயற்படுத்தும் போது அதிகாரிகள் வாதத்தை முன் நிறுத்தாமல் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
அதேபோல் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் விவசாய நவீனமயப்படுத்தலுக்காகவும் கல்வி துறைக்காவும் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாடிக்குடியிலிருக்கும் மக்களை வீட்டு உரிமையாளர்களாக மாற்றுதல் மற்றும் விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்குதல் உள்ளிட்ட புரட்சிகர தீர்மானங்களையும் எடுத்துள்ளோம்.
வட்டியை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி
எவ்வாறாயினும், இம்முறை வரவு செலவு திட்டத்தில் 70 சதவீதமான தொகை கடன் வட்டியை செலுத்துவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உலகில் மிகக் குறைவாக வரி அறவிடும் நாடுகளில் இலங்கை 08 ஆவது இடத்தில் உள்ளதோடு, ஹைட்டி, சோமாலியா, ஈரான், வெனிசுலா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளே அந்த வரிசையில் உள்ளன.
அதனால் வரி அறவீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். வரிக் கட்டாமல் நழுவிச் செல்வோரை வரி செலுத்தும் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதோடு, அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தினை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கவுள்ளோம்.
இலவச கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை சிறந்த முறையில் வழங்க வேண்டுமெனில் அவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
எவ்வாறாயினும் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வுகள் இல்லை என்பதால் நீண்ட கால இலக்குகளுடன் கூடிய வேலைத்திட்டங்களே அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |