கங்கை தீர்த்தப் படிக்கட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு
திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று(12.08.2026) இடம்பெற்றுள்ளது.
கங்கை தீர்த்தப் படிக்கட்டு
இந்த தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட வேண்டும் என்பது 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் மற்றும் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கோரிக்கையாகும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த குமார் ஜெயக்குமரன், கங்கை தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட வேண்டும் என்பது இன்று நேற்று எழுந்த கோரிக்கை அல்ல.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களும் பக்தர்களும் இதற்காக எதிர்பார்த்து வந்துள்ளனர். இந்த நீண்டகால தேவையை நிறைவேற்றுவதற்கான ஒரு சிறிய பங்களிப்பையாவது நாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே நானும் எனது குழுவினரும் முன்வந்துள்ளோம்.
இந்தப் பணியின் நோக்கம் எந்தவொரு தனிநபருக்கும் புகழ் தேடுவதோ, அரசியல் அல்லது வேறு எந்த தனிப்பட்ட நோக்கத்திற்காகவோ அல்ல.
பொதுமக்களின் கோரிக்கை
பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதும், பக்தர்களுக்கு சிறந்த வசதியை ஏற்படுத்துவதும், ஆலயத்தின் புனிதத்தன்மை மற்றும் சிறப்பை மேலும் மேம்படுத்துவதுமே எங்களுடைய நோக்கமாகும்.
ஆலயம் என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ சொந்தமானது அல்ல. அது மக்களின் ஆன்மீக மற்றும் பண்பாட்டு அடையாளத்துடன் தொடர்புடைய ஒரு புனிதத் தலம்.

எனவே, ஆலயத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வந்த இந்த கோரிக்கைக்கு தற்போது ஒரு நடைமுறைத் தொடக்கம் கிடைத்திருப்பது முக்கியமான விடயமாகும். இந்த முயற்சிக்கு பொதுமக்களிடமிருந்து ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.