பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய கும்பல் - முற்றுகையிட சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மட்டக்களப்பு - வெல்லாவெளி 35ஆம் கொலனியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட சென்ற வேளையில், பெண் உட்பட 25 பேர் குழுவினர் பொலிஸாரை தாக்கியதில் பொலிஸ் அதிகாரி இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(06.08.2026) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், குறித்த குழுவினரின் தாக்குதலின் பின்னர், பொலிஸார் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி இருவர் படுகாயம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் ஜீப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் 7 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர், சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் 35ஆம் கொலனியில் உள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதனையடுத்து, அங்கிருந்த பெண் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிடாமல் தடுத்துள்ளனர்.
இதன்போது, படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும், பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தாக்குதலை நடத்தி விட்டு தப்பியோடியவர்களை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை! இருவர் உயிரிழப்பு - நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்