சஞ்சீவ இருந்த அறைக்கு முகத்தை மூடி வந்த நபர்: அடுத்தடுத்து துப்பாக்கிச்சூட்டு சத்தம் - வழங்கப்பட்டுள்ள சாட்சி
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று (24) நடைபெற்றது.
இந்த மரண விசாரணை தொடர்பான சாட்சியங்கள் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன.
இதன்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற வேளை நீதிமன்ற அறையில் கடமையாற்றிய கெசல்வத்தை பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேவாபத்திரனகே தரங்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன் பண்டார தலைமையில் சாட்சியமளித்துள்ளார்.
கான்ஸ்டபிளின் சாட்சி
அவர் கூறுகையில், சம்பவத்தன்று காலை 9.30 - 9.35 மணியளவில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய தினம் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டது.
இந்த நிலையில் காலை 9.40 மணியளவில் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்ற மண்டபத்தின் மூடிய கதவைத் திறந்து ஒரு சந்தேகநபரை திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
சிறை அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து கணேமுல்ல சஞ்சீவவை அழைத்து வந்துள்ளார் என்றார். சந்தேகநபரை சிறையில் அடைக்கச் சொன்னேன். அப்போது, இந்த சந்தேகநபருக்கு எதிரிகள் இருப்பதால் அவரை கூண்டில் அடைக்க முடியாது என சிறை அதிகாரி தெரிவித்தார்.
பிறகு அவரை இருக்கையில் அமரச் சொன்னேன். நீதவான் கேட்டால் அதற்கான காரணங்களை நீங்களே விளக்கிக் கூறுங்கள் என்றும் சிறை அதிகாரியிடம் கூறினேன். பிறகு சந்தேகநபர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் சுமார் முப்பது வழக்குகள் எடுக்கப்பட்ட பிறகு, ஸ்கைப் துண்டிக்கப்பட்டது. அப்போது கணேமுல்ல சஞ்சீவ வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சந்தேகநபர் கணேமுல்ல சஞ்சீவவிடம் நீதவான் வினவினார் வழக்குக்கு பிணை கிடைத்ததா என்று. கணேமுல்ல சஞ்சீவ குறிப்பிட்டார் பிணை வைக்கப்படாது என்று. இதன்போது, நீதிமன்ற உத்தரவின்றி சந்தேகநபர் ஏன் அழைத்து வரப்பட்டார் என நீதவான் சிறைச்சாலை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார்.
சிறை அதிகாரி பதில் சொல்ல முன் வந்தார். ஒன்பது என்ற வார்த்தையைத்தான் அவரால் சொல்ல முடிந்தது. திடீரென்று மூன்று நான்கு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. உள்ளே இருந்தவர்கள் அலற ஆரம்பித்தனர். சட்டத்தரணி போன்று உடை அணிந்த ஒருவர் கூண்டு நோக்கி திரும்பி ஏதோ செய்து கொண்டிருந்தார். அதனுடன் துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் ஒலித்தன.
அந்த நபரின் முகத்தை நான் பார்க்கவில்லை. நீல நிற டை அணிந்திருந்தார். அதன்பின் அந்த நபர் கதவை திறந்து வெளியே ஓடினார். கையில் எதுவும் இல்லை. பிறகு நீதிபதி இருக்கையைப் பார்த்தேன். நீதிபதி அங்கு இல்லை. பின்னர் நாங்கள் சோதனை செய்தோம். பின்னர், நீதிபதி பெஞ்ச் கீழ் இருந்தார். அவரை பத்திரமாக அவரது அறைக்கு அழைத்து சென்றோம்.
இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கணேமுல்ல சஞ்சீவ என்ற சந்தேக நபர் கூண்டில் முகம் குப்புறக் கிடந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணியின் சாட்சி
அதன் பின்னர், சம்பவம் இடம்பெற்ற போது நீதிமன்ற அறையில் இருந்த சட்டத்தரணி பிரியந்த புஸ்பகுமார சமரநாயக்க சாட்சியமளிக்கையில், சம்பவத்தன்று காலை 8.30 மணியளவில் நீதிமன்ற அறைக்குள் வந்ததாக குறிப்பிட்டார்.
"காலை 9.30 மணியளவில் நடவடிக்கைகள் தொடங்கியது. அப்போது, உயரமான ஒருவர், ஃபைல் கவரால் முகத்தை மூடிக்கொண்டு நீதிமன்ற அறைக்குள் வந்தார். நான் அவன் கண்களை மட்டும் பார்த்தேன். இந்த நபர் ஒரு வழக்கறிஞர் என்று நான் நினைக்கவில்லை. இந்த நபர் ஒரு சிஐடி அல்லது போதைப்பொருள் அதிகாரி என்று நினைத்தேன். பின்னர் கணேமுல்ல சஞ்சீவ வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபரை கூண்டில் முன்னிலைப்படுத்தினர். நீதவான் சந்தேக நபரிடம் பிணை வழங்கியுள்ளாரா என வினவினார். பிணை இல்லை என்றார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்றி ஏன் அழைத்து வரப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் நீதவான் வினவினார்.
அதற்கு சிறை அதிகாரிகள் ஏதோ சொன்னார்கள். அதே சமயம் அந்த உயரமான நபர் பின்னால் இருந்து எதையோ எடுத்து சஞ்சீவ மீது வீசினார். அதோடு துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது. சுமார் ஐந்து சூட்டு சத்தங்கள் கேட்டன.
பின்னர் அந்த நபர் கைத்துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு கதவை திறந்து விட்டு சென்றார். அப்போது ருக்ஷான் என்ற அதிகாரி “ஒரு வக்கீல் சுட்டுவிட்டார்” என்று சத்தம் போட்டார். கூட்டம் கத்த ஆரம்பித்தது. சஞ்சீவ கூண்டில் கிடப்பதைப் பார்த்தேன்'' என்றார்.
You May Like This..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |