கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவரின் புதைகுழி அகழ்வு! விசாரணை ஆரம்பம்
கணேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவரின் புதைகுழி தோண்டப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெகசின் சிறையில் நடந்த மோதலில் உயிரிழந்த, பாதாள உலகக் கும்பலின் உறுப்பினர்களில் ஒருவரும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருமான முகமது அஸ்மான் செராஃப்தீன் என்பவரின் உடல் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டுள்ளது.
அஸ்மான் செராப்தீன் உடல் புதைக்கப்பட்ட மயானத்தில், ஒரு கும்பல் குழி தோண்டியதாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து, மத்தேகொட பொலிசார் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
அஸ்மான் செராப்தீனின் உறவினர்கள் மத்தேகொட பொலிஸில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர். அஸ்மான் செராப்தீன் என்பவர் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகத்தில் ஒரு துப்பாக்கி சுடும் வீரராகக் கருதப்படுகிறார்.
பதற்றமான சூழ்நிலை
மேலும் கணேமுல்லா சஞ்சீவ கொலைச் சம்பவத்திலும் அ வர் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த. ஒகஸ்ட் 6 ஆம் திகதி இரவு சுமார் 10.20 மணியளவில் மெகசின் சிறையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையின் போது நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

இறந்தவரின் உடல் மத்தேகொடவில் உள்ள ஒரு உறவினரின் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் மத்தேகொட முஸ்லிம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும், உடல் புதைக்கப்பட்ட குழியின் அடிவாரத்திலிருந்து சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு யாரோ ஒருவர் குழி தோண்டியிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
பொலிசாருக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ தெரிவிக்காமல், மயான ஊழியர்கள் மீண்டும் குழியை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மத்தேகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.