கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது
பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஓருவரான சஞ்சீவ குமார சமரரத்ன, எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவி மற்றும் ஆயுதங்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர, எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவர் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ மீது, சட்டத்தரணியாக நடித்த ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தற்போது தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நேற்று (13) இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் தங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து இந்தக் கொலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும், கொலைக்காக தேவையான துப்பாக்கிகளை வழங்கி குறித்த நபர் உதவி செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் (Repeater) வகை துப்பாக்கி ஒன்று, 10 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசீன்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 69 வயதுடைய கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening