இலங்கையிலுள்ள அடிப்படைவாதிகளுக்கு புனர்வாழ்வளிக்காவிடின் மீண்டும் குண்டு வெடிக்கும்! கம்மன்பில எச்சரிக்கை
இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கையுடையவர்களுக்கு முறையாகப் புனர்வாழ்வளிக்கத் தவறினால், எதிர்காலத்திலும் நாட்டில் குண்டு வெடிப்புகள் நிகழும் அபாயம் உள்ளது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று(04.04.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசும், இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கையுடையவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

மாறாக, பிரதான சூத்திரதாரியைத் தேடுவதிலேயே அனைவரும் காலத்தைக் கடத்துகின்றனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் 12 ஆயிரம் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டமையால் தான், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் எந்தவிதத் தாக்குதல்களும் இடம்பெறவில்லை.
பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்டவர்களிடம் பயிற்சி பெற்ற 300 இற்கும் மேற்பட்டவர்கள் இன்றும் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய மௌலவிகள் பலர் சிறையில் உள்ளனர்.
இவர்களுக்குச் சரியான முறையில் புனர்வாழ்வளித்துச் சமூகமயப்படுத்த வேண்டியது தேசிய பாதுகாப்பிற்கு அவசியமானது.
புத்தகத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள்
எனது நூல் வெளியீட்டு விழாவுக்குப் புலனாய்வுப் பிரிவினர் வருகை தந்து குறிப்புகளை எடுத்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களின் அறிக்கைகளை முழுமையாகப் பரிசீலித்தே நான் இந்தப் புத்தகத்தை எழுதினேன்.

இதில் விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவிதத் தகவல்களும் இல்லை. தற்போது சூத்திரதாரி யார் என்பது வெளிப்பட்டுவிட்ட நிலையில், அதனை மேலும் ஆராய்வது பயனற்றது.
அடிப்படைவாதக் கொள்கையை வேரறுக்காமல் வெறும் நபர்களை மாத்திரம் தேடுவது தீர்வாகாது. அரசு இந்த விடயத்தில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்தால் நாடு மீண்டும் ஒரு பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றார்.
சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் சிஐடியினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri