இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம்: சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து
இலங்கைக்கான தூதுவர் எலிசபெத் கே ஹோர்ஸ்டுக்கான (Elizabeth K. Horst) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
2024 மே 9 ஆம் திகதி அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு எழுப்பிய கேள்விகளுக்கு எலிசபெத் ஹோர்ஸ்ட் அளித்த பதில்கள், இலங்கை நாட்டின் நிலைமையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவேண்டும்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நியமனம் தமக்கு உறுதிப்படுத்தப்பட்டால், பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நல்லிணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை கோருவோருக்கு ஆதரவளிக்க எலிசபெத் கே. ஹோர்ஸ்ட் உறுதியளித்துள்ளார்.
இந்தநிலையில் இந்த நியமனத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவேண்டும் என்று கம்மன்பில கோரியுள்ளார்.
இதேவேளை தூதுவர் நியமனம் உறுதிசெய்யப்பட்டால், இலங்கையில்; அமெரிக்காவின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைக்கான தற்போதைய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்குப் பின் எலிசபெத் கே.ஹோர்ஸ்ட் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |