சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் செல்ல வந்த முச்சக்கரவண்டி சாரதிக்கு அச்சுறுத்தல் - வெளியான காணொளி (Video)
போக்குவரத்து சேவையை வழங்கும் முன்னணி செயலியினூடாக வருகை தந்த முச்சக்கரவண்டி சாரதியை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் முன்னிலையில் சாதாரண முச்சக்கரவண்டி சாரதிகள் சிலர் அச்சுறுத்திய சம்பவமொன்று காலியில் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் போக்குவரத்து சேவையை வழங்கும் முன்னணி செயலியினூடாக முச்சக்கரவண்டியொன்றை முன்பதிவு செய்துள்ளனர்.
அதற்கமைய முன்பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி குறித்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல அப்பகுதிக்கு வந்து பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த போது அந்த பகுதியில் இருந்த ஏனைய சாதாரண முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் சிலர் இணைந்து செயலியின் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் வருகை தந்த முச்சக்கரவண்டியின் சாரதியை அச்சுறுத்தியுள்ளனர்.
மிரட்டப்பட்ட சாரதி
குறித்த வெளிநாட்டு பயணிகளை ஏற்ற வேண்டாம் எனவும், அவர்களை இறக்கி விடுமாறும், அது அவர்களுடைய பகுதி என்பதால் அவர்கள் தான் அந்த பகுதியில் முச்சக்கரவண்டி பயணங்களை செய்ய வேண்டும் எனவும் மிரட்டியுள்ளனர்.
பதிலுக்கு மற்றைய சாரதி, சுற்றுலா பயணிகள் செயலி மூலமாக தன்னை அழைத்ததாகவும் அதன் காரணமாகவே தான் அங்கு வந்ததாகவும் குறித்த பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டியது தன்னுடைய கடமை எனவும் கூறியுள்ளார். இதை அடுத்து அங்கு இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் வலுப்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் முழுவதையும் சுற்றுலா பயணிகள் அவர்களுடைய கமராவில் பதிவு செய்துள்ளனர். நடத்த சம்பவத்திற்காக குறித்த சுற்றுலா பயணிகள் முன்பதிவு மூலம் வரவழைத்த முச்சக்கரவண்டியின் சாரதியிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
மேலும் தற்போது சுற்றுலா பயணிகளால் பதிவு செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.