இலங்கையில் கைதான காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர்! நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
இலங்கையில் கிரிக்கெட் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட காலி மார்வெல்ஸ்(Galle Marvels) அணியின் உரிமையாளரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் தொடரில் காலி மார்வெல்ஸ்(Galle Marvels) அணியின் இந்திய உரிமையாளர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் கடந்த (12.12.2024) கண்டி பல்லேகல மைதானத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
விசாரணை
இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதற்குப் பதிலளித்த அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி உதார கருணாதிலக்க, சந்தேகநபரை இலங்கையில் தடுத்து வைக்க நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றார்.
பிணை நிபந்தனை
இதன்படி, குறித்த சந்தேகநபரை 500,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர் ஒவ்வொரு புதன்கிழமையும் விளையாட்டு ஊழல் விசாரணைப் பொலிஸ் பிரிவில் முன்னிலையாக வேண்டும் என மற்றுமொரு பிணை நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, ஜனவரி 27ம் திகதி மீண்டும் முறைப்பாட்டை அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |