செப்டெம்பரில் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து!
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து மேலும் நெருக்கடி நிலையொன்று உருவாகும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும். அல்லது இப்போது இருக்கும் பிரேரணையை தொடரவும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது இலங்கையின் இன்றைய நிலைமை குறித்து கண்டிப்பாக பேசப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மோசமான தாக்குதல் குறித்து இன்று பல்வேறு நாடுகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
தேர்தலை எதிர்கொண்டால் மக்களால் பலரும் நிராகரிக்கப்படுவார்கள்
தூதரகங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. எனவே இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து மேலும் நெருக்கடி நிலையொன்று உருவாகும். ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த வேளையில் பல்வேறு நாடுகளின் ஆதரவு இருந்தது. ஜனநாயகத்தை நிலைநாட்டும் வாய்ப்புகள் உள்ளதாக நம்பப்பட்டது .
அவ்வாறு இருக்கையில் இப்படியான மனித உரிமை மீறல்கள் அவர் மீதான நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளது. அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பது அவரவர் உரிமையாகும். தாக்குதல் மூலமாக அதனை தடுக்க எடுத்த நடவடிக்கை மிக மோசமானது.
அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போதுள்ள நெருக்கடி நிலைமையில் அரசாங்கமாக இருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் தேர்தலுக்குச் செல்ல விரும்ப மாட்டார்கள்.
அவ்வாறு தேர்தலை எதிர்கொண்டால் மக்களால் பலரும் நிராகரிக்கப்படுவார்கள் என்பது தெரியும்.
எனவே, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் மூலமாக ஏதேனும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து அதன் பின்னரே தேர்தல் குறித்து சிந்திக்குமென எதிர்பார்க்கிறேன் என்றார்.